சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள வான்வழியில் டிரோன்கள் பறப்பதற்கான புதிய வழிகாட்டு முறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா பறக்கும் தொழில்நுட்பங்கள் (Unmanned Aircraft Systems – UAS) குறித்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையை ஏற்று டிரோன் பயன்பாட்டில் தாராளம் காட்டியிருக்கிறது இந்த புதிய விதிமுறைகள்.

விமான நிலைய வெளிவட்டத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் சுற்றளவாக இருந்த ‘ரெட் ஜோன்’ தற்போது 12 கிலோ மீட்டர் சுற்றளவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அப்பால், “யெல்லோ ஜோன்” எனும் கட்டுப்பாட்டுடன் பறக்க அனுமதிக்கப்பட்ட பகுதியாகவும், மூன்றாவதாக ‘க்ரீன் ஜோன்’ எனும் அனுமதி தேவைப்படாத கட்டுப்பாடு இல்லாத பகுதி என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது.

சிகப்பு, மஞ்சள், பச்சை வண்ணங்களில் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள ட்ரான்களை பறக்க விடுவதற்கான வரைபடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

எனினும், க்ரீன் ஜோனில் டிரோன்களை இயக்குவதற்கு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

டிரோன்களுக்கு என்று தனிப்பட்ட அங்கீகார எண்கள் (Unique Identification Number – UIN) ஏதும் இல்லை என்றபோதும். டிரோன் குறித்த தகவலை இணையதளம் வாயிலாக கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

250 கிராமுக்கும் குறைவான எடைகொண்ட நேனோ டிரோன்களுக்கு தனிப்பட்ட குறியீட்டு எண்களோ அல்லது வனிக நோக்கில் இயக்கப்படாத மைக்ரோ டிரோன்களுக்கு ரிமோட் பைலட் உரிமமோ அவசியமில்லை.

இதர டிரோன்களுக்கு தனிப்பட்ட குறியீட்டு எண் மற்றும் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்க்கான அனுமதி (Unmanned Aircraft Operator Permit – UAOP) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக பச்சை மண்டலத்திற்கு உட்பட்ட தனியார் வளாகத்திற்குள் இயக்க அனுமதி பெறுவதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், போக்குவரத்து போன்ற பணிகளுக்கு இந்த நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இருந்தபோதும், ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, காவல்துறை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கண்காணிப்பு மற்றும் அவசர தேவைகளுக்கே ஆளில்லா விமான ரகங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கான ரிமோட் பைலட் உரிமம் மற்றும் ரிமோட் பைலட் உரிமம் என்று இரண்டு பிரிவுகளின் கீழ் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாணவர்கள் பிரிவில் வழங்கப்படும் உரிமம் ஐந்தாண்டு வரை செல்லத்தக்கது இதனை மேலும் இரண்டாண்டு நீட்டித்துக் கொள்ளலாம். இதர பிரிவில் உரிமம் பெறுவோருக்கு பத்தாண்டு வரை செல்லத்தக்கது.

இந்த உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 100 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விதமுறைகளை மறுவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட மண்டலங்களை தாண்டி இயக்கப்படுவது, இதனை கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கும் நிலையில் டிரோன்களுக்கான கட்டணச் சுமையை 300 கிலோவில் இருந்து 500 கிலோவாக அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்த முழு விவரங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் https://digitalsky.dgca.gov.in/ அறிந்துகொள்ளலாம்.