டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், கேரளாவில் மட்டும் நேற்று 31,445 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு காரணம், ஓணம் பண்டிகையையொட்டி, கேரள மாநில அரசு முழுமையாக தளர்வுகளை அகற்றியதே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும கடந்த 24 மணி நேரத்தில் 45,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 7,571 அதிகம். இதுவரை 3,25,58,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 607 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம, இதுவரை இந்தியாவில் 4,36,365 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 34,159 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,17,88,440 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,33,725 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 60,38,46,475 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 80,40,407 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரள மாநிலம் திகழ்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 75 சதவிகித பாதிப்பு கேரளாவிலேயே பதிவாகி உள்ளது. அங்கு கடந்த 20-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக இருபதாயிரம் என்ற அளவில் பதிவாகி ஆகிவந்தது. தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
24-ம் தேதி நிலவரப்படி 24,296 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. , நேற்று (25ந்தேதி) நிலவரப்படி 31,445 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 123 பேர் சுகாதாரப் பணியாளர்கள். மொத்தம் 1,70,292 பேர் இப்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். நேற்று 20,271 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 215 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே, கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 19,972 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா டெஸ்ட் பாஸிட்டிவ் சதவீதம் 15.63 என்ற அளவில் இருந்த நிலையில், இப்போது டெஸ்ட் பாஸிட்டிவ் சதவீதம் 19.03 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் முழுவதும் 4,70,860 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா புதிய பாதிப்புக்களின் எண்ணிக்கை கடுமையாக உயரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்ததற்கு, பினராயி விஜயன் தலைமையிலான மாநிலஅரசின் அஜாக்கிரதையே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.