சென்னை: சென்னையில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக 200 வார்டுகளில், 200 தடுப்பூசி மையங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழகஅரசு ஏராளமான தளர்வுகளை வழங்கியதுடன், தொழிற்நிறுவனங்கள் முழுமையாக தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் அரசு நிறுவனங்கள், ஆசிரியர்கள் 100% பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில்  இதுவரை  36.8 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 25.7 லட்சம் பேர் முதல் டோஸ் போட்டுள்ளார்கள். 11 லட்சம் பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார்கள். மக்கள் தொகை அடிப்படையில் இது வெறும் 30 சதவீதம் மட்டுமே. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் பரவலாக நிலவி வருகிறது.

சென்னையில் தற்போது,  47 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் செயல்படுகிறது. மார்க்கெட் பகுதிகள், நிறுவன பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணியும், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு  வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியையும் சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்களை நடத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதுமட்டுமின்றி,  சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் தலா ஒரு நிரந்தர தடுப்பூசி மையம் என்று 200 மையங்கள் திறக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.  தினமும் ஒவ்வொரு மண்டலத்திலும் 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை தேர்வு செய்து அங்கு சென்று தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.