சென்னை

டுப்பூசி போடுவதில் பின் தங்கி உள்ளதால் சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடக்கும் போதும் மற்ற நகரங்களை பின் தங்கி உள்ளது.  நேற்று வரை மொத்தம் 36.49 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.  இதில் 25.14 லட்சம் பேர் முதல் டோஸ் மட்டுமே போட்டுக் கொண்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 39% பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கொல்கத்தாவில் 52.96 லட்சம் டோஸ்களும் மும்பையில் 86.69 டோஸ்களும் பெங்களூரில் 96.16 லட்சம் டோஸ்களும் இதுவரை போடப்பட்டுள்ளன.  டில்லியில் மிகவும் அதிகமாக 1.25 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.   சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 95% தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும் இன்னும் அதிகம் பேருக்கு போட வேண்டி உள்ளது.

இதையொட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.   இந்த முகாம்களின் மூலம் மேலும் அதிக அளவில் சென்னை நகரவாசிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இந்த வகையில் 200 நிரந்தர தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த முகாம்கள் அனைத்தும் மக்களுக்கு வந்து போக வசதியான இடங்களில் அமைக்கப்பட உள்ளன.  மேலும் பணி இடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், அங்காடிகள், உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.   இந்த முகாம்கள் எங்கெங்கு அமைக்கப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.