வாஷிங்டன்

மெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் இன்று பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 3.85 கோடி பேர் பாதிக்கப்பட்டு 6.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3.04 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 74.27 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கு பிஃபிஸர் மற்றும் பயோண்டெக், மாடர்னா மற்றும் ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருந்தது.  பெருந்தொற்று பரவி வரும் காலத்தில் ஒரு தடுப்பூசி மனிதர்களிடம் சோதனை செய்யப்பட்டு அதன் திறனைப் பொறுத்து இந்த அனுமதி வழங்கப்படுகிறது.   அவ்வகையில் இந்த மூன்று நிறுவன மருந்துகளுக்கு அவசரக் கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 17 கோடி பேருக்கு இரு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.  அதில் 9.2 கோடி பேர் பிஃபிஸர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் 16 வயதைத் தாண்டியவர்கள் ஆவார்கள்.  இவர்களிடம் சோதனை செய்ததில் இந்த தடுப்பு மருந்து முழுத் திறனுடன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதையொட்டி அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகம் பிஃபிஸர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது.  மேலும் இதே தடுப்பூசி 12 முதல் 16 வயது வரை உள்ளோருக்கு அவசரக் கால பயன்பாட்டுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.