செனனை: தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவிலான சுங்கச்சாவடிகள் தமிழகத்தில்தான் உள்ளன. மொத்தம் 74 சுங்கக்சுவாடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளில் 42 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் தூரம் 5,381 கிலோ மீட்டர் மட்டுமே. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்அதிகபட்சமாக 20 முதல் 25 சுங்கச் சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 74 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தமிழக மக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருகிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை. இந்த அவலமான நிலை உருவாக காரணம் தமிழ்நாடு அரசின் மெத்தனம் என்றே குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்கக்கட்டம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருடத்திற்கு ஒருமுறை கட்டண உயர்வு என்ற பெயரிலும் கட்டணத்தை உயர்துகிறது. இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும், மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ந்தேதி முதல் கட்டணம் உயரும் என அறிவித்துள்ளது. தற்போதைய கட்டணத்தில் இருந்து 8% வரை கூடுதல் கட்டணம் உயரலாம் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த கட்டண உயர்வு கனரக, இலகுரக ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு, தற்போதுதான் அதிலிருந்து மீண்டும் வரும் வகையில் வாகன போக்குவரத்து சராசரியாக தொடங்கி உள்ள நிலையில், சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
வாகன ஓட்டிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் சுங்கச்சாவடிகள், நெடுஞ்சாலையை முறையாக பராமரிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.