சென்னை

ரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர உள்ளதற்கு மணல் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.    அவை  திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ளவிக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான் கோட்டை ஆகியவை ஆகும்.

இந்த 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ‘‘ஆண்டு தோறும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப்படி  கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் ஆகும். எனவே இது புதிய விதிமுறை அல்ல. கட்டணங்கள் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கிறோம். இது குறித்த அறிவிப்பைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை அடுத்த வாரம் வெளியிடும்’’ என்றனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், ”ஆண்டு தோறும் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதோடு, வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்களும் அவதிப்படுகின்றனர்.

ஆகவே, தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும்,  தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும், மேலும் சுங்கச் சாவடிகளில் தமிழர்களையும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளோம்’’ என்றார்.