சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தினார்.
சென்னை, புளியந்தோப்புப் கே.பி.பார்க் பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2016-ல் குடிசை மாற்று வாரியத்தால் பல அடுக்கு கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டது. சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம்கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன. இந்த குடியிருப்புகள் கட்டுமான வேலை முடிவடைந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகமானால், இந்த குடியிருப்பு பகுதிகள் கொரோனா நோயாளிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறைந்ததும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பயனர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
ஆனால், இந்த அடுக்குமாடி குடியிருப்பு முறையாக கட்டப்பட வில்லை என்றும், மேல் பூச்சு உதிர்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இக்கட்டிடத்தின் தரத்தை சிறப்பு குழு அமைத்து சோதனை செய்ய திமுக அரசு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியதும், எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய கட்டிட விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் “தொட்டாச்சிணுங்கி போல தொட்டால் விழுகிறது. அதுபோன்ற கட்டிடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடம் முறைகேடாக கட்டப்பட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது.
அதனால், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த கட்டிடம் கட்டி முடித்த பின் இதற்கு சான்றிதழ் அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இந்த அடுக்குமாடி கட்டிடம் தொடர்பான அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.