க்னோ

தாலிபான்களை இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டிய சமாஜ்வாதி கட்சி எம் பி மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  நாட்டு மக்களில் பலரும் தாலிபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பியோட முயன்று வருகின்றனர்.  தாலிபான்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்பதால் உலகெங்கும் அவர்கள் மீது அச்சம் உள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷப்குர் ரகுமான் பர்க், “ஆப்கானிஸ்தானில் ரஷ்யா அல்லது அமெரிக்காவை நிலைநிறுத்த அனுமதிக்காதவர்கள் தாலிபான்கள். இப்போது அவர்கள் தங்கள் நாட்டை வழி நடத்த விரும்புகிறார்கள். இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, ​​நாடு முழுவதும் சுதந்திரத்திற்காகப் போராடினோம். அதேபோல், தாலிபான்களும் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். இது,அவர்களின் தனிப்பட்ட விஷயம்” என அறிவித்தார்.

இதையொட்டி பாஜக நிர்வாகி ராஜேஷ் சிங்கால் இவரது கருத்து தேசத் துரோகம் என காவல்துறை சூப்பிரண்ட் சக்ரேஷ் மிஸ்ராவிடம் புகார் அளித்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் பர்க் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டது.  இவருடன் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட முகமது முகீம் மற்றும் சவுத்ரி பைசன் ஆகியோர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.