சென்னை
புதுச்சேரி ஆளுநரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மரணம் அடைந்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதைய புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். இது குறித்த தகவலைத் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
தனது டிவிட்டரில் தமிழிசை சவுந்தரராஜன், “என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்.” எனப் பதிந்துள்ளார்.
தாயாரை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்குப் பத்திரிகை.காம் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.