சென்னை: தமிழ்நாட்டில், அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தடை விதித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், நடைமுறையில் கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று உள்ள பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி, ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.