சென்னை: தலைநகர் சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகள் உள்பட 28,65,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மணிஷ் தெரிவித்துள்ளர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தில் சென்னை மாநகராட்சி சாா்பில் கொரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில், அங்கு பணியாற்றும் பணியாளா்கள், அலுவலா்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கொரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அதுபோல சென்னையில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில், சா்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் மற்றும் இணை நோய்கள் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 45,447 பேரில் 15 லட்சத்து4,586 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 31,120 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
18-45 வயதுக்கு உள்பட்ட 35 லட்சத்து 16,474 பேரில் 5 லட்சத்து 73,683 பேருக்கு முதல் தவணையும், 49,267 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் 24,262 பேரில் 10,435 பேருக்கு முதல் தவணையும்,1,171 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
காசநோய் உள்ள 1,696 பேரில் 282 பேருக்கு முதல் தவணையும், 91 பேருக்கு இரண்டாம் தவணையும்,
பாலூட்டும் தாய்மாா்களில் 3,739 பேருக்கு முதல் தவணையும், 88 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
19.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 28,65,576 பேருக்கும், 19.07.2021 அன்று 7,444 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.