டில்லி

ந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார்.

உலக விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் சென்ற வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்தது.  கொரோனா காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டு இந்த வருடம் நடைபெற உள்ளது.  இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடன் இன்று பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடினார்.

 

பிரதமர் மோடி ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான இந்திய  வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடம், “நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களான உங்களுக்காக மிகவும் எழுச்சியுடன் உற்சாகத்தையும், ”நமோ ஆப்” மூலம் உங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  விளையாட்டு வீரர்களான உங்களிடம் ஒழுக்கம், கட்டுப்பாடு, குறிக்கோள் அனைத்தும் உள்ளன.

புதிய இந்தியாவுக்கு உங்கள் நற்பண்புகள் வழி காட்டும்.  நாட்டில் பல்வேறு வேற்றுமைகள் இருப்பினும் உங்களை ஒற்றுமையுடன் நாடே எதிர்பார்த்துக் காத்து உள்ளது.  நீங்கள் முழு மனதுடன் சிறப்பாக விளையாடுங்கள்,  இந்த ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு உங்களுக்கு விளையாட்டு அமைச்சகம் மூலம் உதவுகிறது.  நாடே உங்களுக்குத் துணை நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.