சென்னை: கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்றும், நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்க வேண்டாம் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொங்குநாடு என்ற பெயரில் ஒரு பிரிவினர் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்படுகிறத.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத், கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று விளக்கம் அளித்ததுடன், தமிழகத்தை இரண்டாக பிரிப்பது என்பதும் பாஜகவின் நிலைப்பாடு அல்ல, வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே பாஜகவின் லட்சியம் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  மாநில தலைவரோ, பொதுச்செயலாளரோ கொங்குநாடு குறித்து அதிகாரப்பூர்வ கருத்து வெளியிடவில்லை என்றும் நம் தனிப்பட்ட எண்ணங்களை கட்சியின் கருத்தாக யாரும் தெரிவிக்கப்பவேண்டாம் எனவும் பாஜகவினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.