sta
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடநத்திய நமக்கு நாமே பயணத்தின்  நிறைவு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில்  நடைபெற்றது.  இதில் உறுதிமுழக்க பேரணி நடந்தது.   இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“நமக்கு நாமே பயணத்தில் தமிழகம் முழுவதும் 11100 கிலோ மீட்டர் பயணித்தேன்.  விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மனுக்களை பெற்றேன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வரும் பிப்ரவரி 24ம் தேதி பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது அரசியல் மரபு.
ஆனால் அவரது வயதை குறிப்பிடும் வகையில், மக்கள் வரிப்பணத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில் ஸ்டிக்கர் கலாச்சாரம் பெருகிவிட்டது.
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு செயற்கையாக ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி தி்ட்டமிடல் இன்றி திறக்கப்படாததால் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்துவோம். தவறிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவோம்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக சென்றடையவில்லை.
அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தை மூட முயற்சி நடந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு மூடு விழா நடத்தினார்கள்.
அதிமுக ஆட்சியில் 110 விதியை பயன்படுத்தி 600க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.  அப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் 580க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் கானல் நீராகவே இருக்கிறது.  20 லிட்டர் இலவச குடிநீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திடீரென்று சென்னைக்கு மட்டும் 100 இடங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் குடிநீர் தருவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  ஆனால் அதுவும் ஏமாற்றம் தரும் அறிவிப்பு தான்.
இந்த ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது . பெண்களுக்கு பாதுகாப்பில்லை.
தொழில்துறையில் முதலீடு செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்தார்கள். அது போல  நமது மாநில முதலமைச்சர் ஜெயலலிதா எங்காவது சென்று வந்தாரா? உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக உள்ளேன். உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. மதுக்கடைகளால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும்.  லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும்” – இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.