ee
 
நேற்று நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சேருவது பற்றிய அவர் முக்கிய முடிவை தெரிவிப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். .
ஆனால் கூட்டணி பற்றி இறுதி முடிவு எதையும் அறிவிக்காமல், விஜயகாந்த் நேற்று தனது பேச்சை முடித்துக்கொண்டார் விஜயகாந்த்.   இது தி.மு.க. – காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்லது.
இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம், விஜயகாந்தின் முடிவு பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு  அவர் அளித்த பதில்:
“கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை. தன்னை முதல்–அமைச்சர் வேட்பாளர் என்றும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளவில்லை. எனவே அவரது முடிவு பற்றி இப்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது. இருப்பினும் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சேருமாறு விஜயகாந்தை வீட்டுக்கு சென்று அழைக்கவும் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போட்டியிட ஆர்வத்துடன் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இந்த மனுக்களை ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நேர்காணலை நடத்த இருக்கிறோம்.  அப்போது திறமையான வேட்பாளர்களை தேர்வு செய்வோம்.
விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காதவர்களுக்கு நிச்சயமாக சீட் வழங்கப்படாது” என்றும்  இளங்கோவன் தெரிவித்தார். .