நாளை (22ம் தேதி) மாகாமக பெருவிழா – தீர்த்தவாரி – நடைபெறுகிறது. இதில் பங்குபெற்று மகாமக குளத்தில் புனித நீராட 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு செல்லும் பக்தர்களுக்கு patrikai.com  இதழின் சில ஆலோசனைகள்:

01

  1. தூக்கிச் செல்லவேண்டிய குழந்தைகள் இருந்தால் மகாமக பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. அதீத கூட்ட நெரிசலில் காற்றோட்டத்துக்கு வசதி இருக்காது. குழந்தைகள் மிகவும் அவதியுறும்.
  2. குழந்தைகளையும் அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் என்றால், அவர்களுக்கான பால், பிஸ்கெட், பழங்கள், மாற்றுத்துணிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். மருந்து, டானிக் கொடுக்க வேண்டியிருந்தால் அவற்றையும் மறக்க வேண்டாம்.
  3. தூர இடங்களில் இருந்து வருபவர்கள், கும்பகோணம் சென்று தங்குவதை தவிர்க்கலாம். அருகில் உள்ள தஞ்சை, மாயவரம் நகரங்களில் தங்கி, அங்கிருந்து கும்பகோணம் சென்று நீராடி வருவது சிரமத்தைக் குறைக்கும்.
  4. உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், பேருந்து பயணத்தை தவிர்க்கலாம். தவிர்க்க முடயாத நிலையில் தஞ்சை, மாயவரம் வரை பேருந்தில் சென்று, அங்கிருந்து ரயிலில் பயணிக்கலாம். ஏனென்றால், ரயிலில் சென்றால் குடந்தை நகருக்குள் செல்லலாம். அங்கிருந்து மகாமக குளம் ஓரளவு பக்கம். பேருந்தில் கும்பகோணம் சென்றால், வெகு தூரத்திலேயே தற்காலிக பேருந்து நிலையங்களில் இறங்கிவிட வேண்டும். அங்கிருந்து நடந்துதான் மகாமக குளத்துக்குச் செல்ல வேண்டும்.
  5. கும்பகோணம் நகரில் நிறைய இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், அவரவர் தங்கள் தேவைக்கு இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்துச் செல்வது நல்லது. அதீத கூட்டத்தில் குடிநீர் தொட்டிகளைத் தேடி அலைய வேண்டியதில்லை.
  6. குளுக்கோஸ் அல்லது பழங்கள் எடுத்துச் செல்லுங்கள். சோர்வடையும் போது, உண்ணலாம். புத்துணர்ச்சி கிடைக்கும்.
  7. எல்லா பயணத்தலும் சொல்லக்கூடிய ஆலோசனைதான். அறிமுகமான நபர்கள் பேச முற்பட்டால் தவிருங்கள். அவர்கள் குளிர்பானமோ, பிஸ்கெட்டோ கொடுத்தால் மறுத்துவிடுங்கள்.
  8. கும்பகோணத்தில் நிறைய முக்கியமான கோயில்கள் உள்ளன. நாளை அவற்றை எல்லாம் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிடாதீர்கள். மகாமக குளத்தில் புனித  நீராடிவிட்டு திரும்புங்கள். மற்ற கோயில்களை இன்னொரு பயணத்தில் வைத்துக்கொள்ளலாம். இது கூட்டத்தை குறைத்து பிறருக்கு நாம் செய்யும் உதவி. இதுவே பெரிய புண்ணியம்.

 
குடந்தை நோக்கிய உங்கள் புனித பயணம் இனிதே அமையட்டும்.  Patrikai.com  இதழின் வாழ்த்துகள்!