டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகளை கடந்த நிலையில், பிரதமர் தலைமையில் காஷ்மீர் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல், மாநில அந்தஸ்து உள்பட 5 கோரிக்கைகளை பிரதமர் முன் வைத்துள்ளோம் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் காஷ்மீர் மாநில முதல்வருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர், லடாக் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்  பிறகு இன்று தான் அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு முதல் ஆலோசனை நடத்தியது.  பிரதமர் மோடி தலைமையில்  நேற்று பிற்பகல் பிரதமர் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலோக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

முக்கியமான  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்பட அம்மாநிலத்தை சேர்ந்த 14 முக்கிய தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பின  செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது, கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தலைவர்களும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும், ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துதல், ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரி பண்டிக்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அமைத்தல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், குடியேற்ற விதிகள்  ஆகிய 5 கோரிக்ககைள பிரதமர்  முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதாக பிரதமர் தெரிவித்து உள்ளார் என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த . மெஹபூபா முஃப்தி கூறும்போது, கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பின் ஜம்மு காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முறையை தங்கள் மக்கள் ஏற்கவில்லை. மாதங்களோ,  வருடங்களோ ஆனாலும் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம், இது எங்களின் அடையாளம். சிறப்பு அந்தஸ்தை நாங்கள் பாகிஸ்தானிடமிருந்து பெறவில்லை. அதை இந்தியா வழங்கியது என தெரிவித்தார்.