ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடும்பத்துடன் தங்கி, ₹5.74 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அனுராக் யாதவ் என்பவர், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஆகஸ்ட் 14 முதல் 23-ம் தேதி வரை ஹோட்டலில் தங்கியுள்ளார்.

ஒரு வாரத்துக்கும் மேலாக ரூம், மதிய உணவு, இரவு உணவு என ஹோட்டலின் பல்வேறு சேவைகளையும் குடும்பத்தினர் ஜாலியாக அனுபவித்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 24-ம் தேதி செக்-அவுட் நேரத்தில் ஹோட்டல் நிர்வாகம் “சார்… மொத்தம் ₹5.74 லட்சம் பில்” என்று கணக்கைக் காட்டியுள்ளது.

அதைப் பார்த்த யாதவ், “நான் எதுக்கு சார்… ரூம் புக் செய்த டிராவல் ஏஜென்சிதான் பில் கட்டும்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து ஹோட்டல் மேலாளர் ரவீந்திர சிங், அந்த டிராவல் ஏஜென்சியைத் தொடர்புகொண்டபோது, “யாதவுக்கும் எங்களுக்கும் அப்படி எந்த ஒப்பந்தமும் கிடையாதே!” என்று அவர்கள் கைவிரித்துள்ளனர்.

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், டிராவல் ஏஜென்சியுடன் சேர்ந்து ஹோட்டலை ஏமாற்றியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஹோட்டலில் தங்குவதற்கான புக்கிங் முதல் பில் கட்டாமல் வெளியேறியது வரை எல்லாமே ‘பிளான்’ ஆக இருந்ததா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும்.