ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் சந்திரசேகரராவின் காலைத் தொட்டு மாவட்ட ஆட்சியர்கள் வணங்கிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் படித்த ஆட்சியர்கள் மாநில முதல்வரிடம் மண்டியிட்டடு நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சித்திபேட்டை மாவட்டத்தில் பஆட்சியர் அலுவலகம் புதியதாக கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ் கலந்துகொண்டு, ஆட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அந்த மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடராம்ரெட்டி, முதல்வர் சந்திரசேகர ராவின் கால்களை தொட்டு வணங்கினார். அவரைத் தொடர்ந்து, கமரெட்டி மாவட்ட ஆட்சியரான ஏ. சரத் என்பவரும் முதல்வரின் காலைத் தொட்டு வணங்கினார்
மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில், முதல்வரின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு வணங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியர் தானாகவே காலில் விழுந்தாரா, அல்லது விழ வைக்கப்பட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது. இதைகண்ட பல முன்னாள், இந்நாள் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐஏஎஸ் படித்த ஒருவர், அரசியல்வாதிகளின் காலில் விழுவது, அவரது படிப்புக்கே அவமானம் என கண்டித்துள்ளனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதல்வர் காலில் விழுந்து வணங்குவதற்கு பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் சுயமரியாதையை அடமானம் வைத்து விட்டதாக அம்மாநில எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து ஆட்சியர் வெங்கடராம் விளக்கம் அளித்துள்ளார். அதில், முதல்வர் தனக்கு தந்தையைப் போன்றவர், விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது கலாசாரம் என குறிப்பிட்டுள்ளார். அதனால் புதிய அலுவலகத்தில் பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசிபெற்றேன் என தெரிவித்துள்ளார்.