சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் மத்தியஅரசு முடிவு தெரிவிக்கும் என தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், எச்எல்எல் பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்கப்படாமல் உள்ளது. இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
இதையடுத்து, தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்த, , தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை டெல்லி செல்ல உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை டெல்லி புறப்பட்டார். அவருடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுடன் சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்பட அதிகாரிகள் சிலரையும் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலை விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.