சென்னை: சென்னையில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மொத்தமாக தடுப்பூசி பெற விரும்புபவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே வந்து தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

அதன்படி,  குடியிருப்பு நலச் சங்கங்கள், பெரிய நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்) மற்றும் சமூகங்களுக்காக மொத்த தடுப்பூசி தேவை குறித்து பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா 2ம் அலை காரணமாக , கடந்த ஆண்டை விட, சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 20 சதவீத அளவிற்கு, பரிசோதனை யின்போது தொற்று உறுதி செய்யப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி,  45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை  தீவிரப்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகள், நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளது. அதற்கான இணையதளத்தையும் தொடங்கி, மேலும் அருகே உள்ள மாநகராட்சி அலுவலககங்களையும் தொடர்பு கொண்டு குடியிருப்பு நலச்சங்கள் உதவி பெறலாம் என தெரிவித்துள்ளது.

ஒரு பகுதி அல்லது நிறுவனங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்பட்டால், அவர்களிடம் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி போடும் பணியை செய்ய தயாராக இருப்பதாக கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஒரு படிவம் கொடுக்கப்படும்  அதில். தடுப்பூசி போட விரும்பும் நபரின் பெயர், ஆதார் கார்டு உள்பட அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்டுவதுடன், தடுப்பூசி போடுவதற்கு சாதகமான இடம் குறித்தும் கேட்கப்படுகிறது. இவைகளை குடியிருப்பு நலச்சங்கங்கள் சேகரித்து, மாநகராட்சியை அணுகினால், குறிப்பிட்ட நாளில் அந்த பகுதியில், தடுப்பூசி செலுத்தப்படும்.

தற்போதையை நிலையில், அரசிடம் போதுமான அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், தடுப்பூசி போட விரும்புபவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி ஹெல்த் சென்டரை அணுகியும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனறு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் முயற்சிகளை செய்து வருகிறார்கள். துறைமுக எம்.எல்.ஏ பி கே சேகர் பாபு , திமுகவின் உள்ளூர் செயல்பாட்டாளர்களும் தங்கள் தொகுதிகளில் ஒரு எஸ்எம்எஸ் பிரச்சாரத்தைத் தொடங்கி, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி ஆணையாளர்,   ககன்தீப் சிங் பேடி,  சென்னையில் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இன்னும் மக்களிடையே ஆர்வம் இல்லை. ஒரு நாளைக்கு சுமார் 60,000 பேருக்கு தடுப்பூசி போடும் திறன் சென்னை மாநகராட்சிக்கு உள்ளது. இருந்தாலும்,  ஒவ்வொரு நாளும் குறைந்தது 30,000 பேர் தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே, வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]