டில்லி
கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது. தினசரி பாதிப்பில் அகில உலக அளவில் தற்போது முதல் இடத்தில் உள்ள இந்தியா மொத்த பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாநிலமும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனால் சென்ற மாதம் மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடத்திய போதும் அந்த கூட்டங்களில் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை,. ஏப்ரல் 1 முதல் நடந்த ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வந்துள்ள தகவலில் கொரோனா குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான எவ்வித தகவலும் இல்லை.
குறிப்பாக ஏப்ரல் 20 அன்று இரண்டாம் அலை கடும் உச்சத்தில் இருந்த போது மருத்துவமனையில் படுக்கைகள் காலி இன்மை, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் தட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் தவித்த போது கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம், மற்றும் நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுபவை குறித்து பிரதமரின் அலுவலகம் முடிவு செய்வதால் கொரோனா கட்டுப்பாடு குறித்து பிரதமர் கவலைப்படவில்லை என தோன்றுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதிலில் அவர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் பிறகு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்வர்களுடன் காணொளி கூட்டம் நடத்தியதாக கூறி உள்ளது.
அப்போது பிரதமர் ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் கொரோனா மருத்துவமனைகள் ஆகியவை குறித்து நிபுணர்களிடம் கேட்டறிந்ததாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் சுகாதார அமைச்சர் கொரோனா குறித்த பணிகளை செய்து வருகிறார். அவரிடம் விவரங்களைக் கேட்டறியும் பிரதமர் அவ்வப்போது ஆலோசனைகளைத் தெரிவிப்பதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]