மதுரை: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமான தாக்கத்தை உருவாக்கி வருகிறது. இதை தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதன்படி, ராமநாதபுரத்தில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், தொற்று பரவலை தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளுக்குச் சென்ற வசதிகள், சிகிச்சை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் சந்தித்து தேவையான உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆட்சியருடன் ஆய்வுப்பணிகளில், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.