கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நந்திதா ஸ்வேதாவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை தெரியப்படுத்தியுள்ளார். “கோவிட்டின் அறிகுறிகளைக் கொண்டுள்ளேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் நந்திதா.
’அட்டகத்தி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற நந்திதா ஸ்வேதா ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘எதிர் நீச்சல்’, ‘முண்டசுப்பட்டி’ ‘புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருந்தார்.