சென்னை: பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
கபசுர குடிநீர் உள்பட கிருமி நாசினி, மாஸ்க், சித்த மருந்துகளையும் இலவசமாக வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
கொரோனா தொற்றின் முதலாவது அலையின் போது ஒன்றிணைவோம் வா என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப்பணிகளை திமுக ஆற்றியது. 2வது அலை துவங்கியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.
தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதால் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், மாவட்ட செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு, கொரோனா 2வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றிட வேண்டும்.
விவரங்களை சம்பந்தப்படட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விவரங்களை தெரிவித்து, தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று கூறி உள்ளார்.