தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16 காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஏப்ரல் 17 காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் விவேக்கின் நினைவலை குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. அதில், “விவேக்கின் மறைவு என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் காலையிலிருந்து, இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனது இருந்தது. காரணம், நடிகர் விவேக் அவர்கள் என் மீது மிகுந்த மரியாதையையும், அன்பும், அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே அவர் என்னுடைய ரசிகராக இருந்திருக்கிறார். பின்னால், அபிமானியாக மாறி, பக்தராக மாறக்கூடிய அளவுக்கு விவேக் என்னை நேசித்திருக்கிறார்.

சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றார். தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எப்போது சந்தித்தாலும் சொல்வார். நான் கேட்டுவிட்டு அவரை ஊக்கப்படுத்துவேன். அவருக்கு எனக்குத் தெரிந்த யுக்திகளை சொல்வதும் வழக்கம். சமீபத்தில் என்னை ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசிவிட்டு, சில வேலைகளுக்கு என்னிடம் அனுமதியும் கேட்டுவிட்டுச் சென்றார். அவருடைய அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகரிடம் நான் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

எல்லோரும் அவருடைய மறைவில் துக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுடைய துக்கத்தில் நான் பங்கேற்க முடியாது. என்னுடைய துக்கத்தில் நீங்களும் பங்கெடுக்க முடியாது. அவர் அவர்கள் துக்கம் அவர் அவர்களுக்குத் தான். விவேக்கின் குடும்பமே என் மீது பாசமும், நேசமும், அன்பும் வைத்திருக்கூடிய ஒரு அற்புதமான குடும்பமாகும்.

அவருடைய மறைவு அவரது குடும்பத்துக்கு அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துக்கத்திலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விவேக்கின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பம் துக்கத்திலிருந்து வெளிவரவும் இறைவனுடைய அருள் வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

[youtube-feed feed=1]