சென்னை: மறைந்த பத்மஸ்ரீ விவேக்கின் இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணி அளவில் தொடங்கியது. காவல்துறை அணிவகுப்புடன், சாலையின் இருமங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் விவேக்கை வழியனுப்பி வைத்தனர்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நாயகனாக கால் பதித்த நடிகர் விவேக், ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வந்தார். மூட நம்பிக்கைகளை தனது நகைச்சுவை மூலம் மக்களிடம் இருந்து ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதனால், மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமூக நலனில் மிகுந்த ஆர்வம் கொண்ட அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றி லட்சக் கணக்கான மரங்களை நட்டார். வரும் சந்ததியினரும் தன்னைப் போன்று மரங்களை நட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
விவேக் மறைவு, தமிழ் திரையுலகிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என திரையுலகினர் பலர் கண்ணீர் சிந்துகிறார்கள். திரையுலகில் அவர் படைத்த சாதனைகளுக்காகவும் சமூகத்தின் மீது அவர் காட்டிய அக்கறையை போற்றும் விதமாகவும், தமிழக அரசு, அவரை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
அதற்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் புடை சூழ, விவேக்கின் உடல் மின்மயானத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.