புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சில குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து ரயில் சேவைகளை நிறுத்தி வைக்கும்படி, ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

‍இதுதொடர்பாக, ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணியருக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, பல ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 4,000 ரயில் பெட்டிகள் நாடு முழுவதும் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும் மாநிலங்களிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க, மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். நாட்டில், 70% ரயில் சேவைகள் இயங்கத் துவங்கியுள்ளன. அதிகளவில் பயணியர் வருகையை சமாளிக்க, கூடுதலாக, 140 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து, தங்களுக்கு ரயில் சேவைகளை ரத்து செய்யும்படி, எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. ரயில் பயணங்களின்போது, தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா? தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா? என்ற தகவல்கள், ஐஆர்சிடிசி இணையதளங்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.