சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று வரலாறு காணாத அளவில் உச்சம் பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 2,00,739 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 1,038 பேர் உயிரிழந்துள்ள சோகம் ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், ஒராண்டை கடந்தும் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கடந்த ஆண்டு (2020) உச்சம்பெற்றிருந்த கொரோனா, ஆண்டு இறுதியில் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன், தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. ஆனால், தற்போது உருமாறிய நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை உச்சமடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2வது அலை பரவியுள்ளதாக சுகாதாரத்துறையினர்ல கூறியுள்ளனர்.
இது அடுத்த 4 வாரங்கள் மேலும் கடுமையாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன், கொரோனா கட்டுப்பாடுகளையும் மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வரலாறு காணாத அளவிலான பாதிப்பில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, உலக அளவிலும் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 2,00,739 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர் 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 1038 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,73,123 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 93,528 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1,24,29,564 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 11,44,93,238 பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
கொரோனா பரவலின் அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானது என்பதால் பொதுமக்கள் இரண்டாவது அலையை எதிர்கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சுத்தமாகப் பேணுதல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிப்பதோடு தகுதியானவர்கள் தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.