குஜராத்தில் நேற்று ஒரே நாளில் 6690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 67 பேர் இறந்ததாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது, கொரோனா தொற்று பரவ தொடங்கிய கடந்த ஓராண்டில் நேற்றைய பாதிப்பு தான் மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

குவியல் குவியலாக இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதும், சாரை சாரையாக மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ்கள் படையெடுப்பதும் சுகாதாரத் துறை அளித்திருக்கும் இந்த புள்ளிவிவரங்கள் நம்பும் படியாக இல்லை என்று அம்மாநிலத்தை சேர்ந்த அசு்சு, தொலைக்காட்சி, இணையதள செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடக பதிவுகள் என்று அனைத்தும் உறுதிபடுத்துகிறது.

சூரத் நகரை விட்டு தங்கள் சொந்த ஊரான ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மக்கள் தலைதெறிக்க ஓடியதன் பின்னணியும் இந்த பதிவுகள் மூலம் புலப்படுகிறது.

‘சந்தேஷ்’ இதழில் வெளியான செய்தி

ஏப்ரல் 12 ம் தேதி அகமதாபாத் நகரில் 20 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அகமதாபாத்தில் உள்ள  ஒரே ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து மட்டும் 63 சடலங்கள் கொண்டு செல்லப்பட்டதாக  ‘சந்தேஷ்’ எனும் குஜராத்தி மொழி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகையை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் இந்த மருத்துவமனையின் வெளியே 17 மணி நேரம் காத்திருந்து சேகரித்த செய்தியின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டதாக அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வெளியில் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றையும் குறித்த தகவல்களை சேகரித்த அந்த செய்தியாளர், நகரின் இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் இத்தனை மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், நகரின் பிற மருத்துவமனைகள் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஏற்பட்டிருக்க கூடிய உயிரிழப்புகளை ஊகித்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும், உண்மையான புள்ளிவிவரத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி, இறப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று மட்டுமே காரணம் என்பது மட்டுமே கொரோனா இறப்பாக பதியப்படுவதாகவும்.

நோயாளிக்கு வேறு கோளாறுகள் இருந்து கொரோனா தொற்றும் ஏற்பட்டால் அவை கொரோனா இறப்புகளாக கருதப்படுவதில்லை என்றும், இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழங்கியுள்ள விதிகளை பின்பற்றியே புள்ளிவிவரங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆனால், இந்திய மருத்துவ ஆய்வு கழகம் வழங்கியுள்ள நெறிமுறைகளில் அனைத்து சிறப்புகளும் கொரோனா தொற்று நோய் இறப்புகளாகவே பதியப்படவேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

மயான பூமி மற்றும் மருத்துவமனைகளின் வெளியே காத்திருக்கும் பத்திரிகையாளர்களோ அரசு தரும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்களில் உண்மைதன்மை துளியும் இல்லை என்று கூறுகின்றனர்.

அதேபோல், இணையதள செய்தி நிறுவனமான ‘கபர் குஜராத்’, ஜாம் நகர் மாவட்டத்தில் செவ்வாயன்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அரசு புள்ளிவிவரம் கூறுகிறது இங்கு ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரே ஒருவர் உயிரிழந்ததாக அறிவித்தது, ஆனால், ஏப்ரல் 10 முதல் 11 வரையான 48 மணி நேர  இடைவெளியில் 100 பேர் இறந்ததாக செய்திவெளியிட்டிருக்கிறது.

 

ஜாம் நகர் மாவட்டதில் உள்ள குரு கோபிந்த் மருத்துவமனையில், இந்த மாவட்டத்தை தவிர மொர்பி, ராஜ்கோட், ஜூனாகாத் மற்றும் அம்ரேலி ஆகிய பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பெருமளவிலான நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், இங்கு ஏப்ரல் 13 ம் தேதி மட்டும் 54 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தியில்  தெரிவித்துள்ளது.

இங்குள்ள இரண்டு மயான பூமியில், கொரோனா விதிமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்து விசாரித்த போது இந்த விவரங்கள் தெரியவந்ததாக  ‘கபர் குஜராத்’ செய்தியாளர் தெரிவித்ததாக ஸ்க்ரோல் மின்னிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்க்ரோல் நிறுவனம் அகமதாபாத் அரசு மருத்துவமனை மற்றும் ஜாம் நகர் குரு கோபிந்த் மருத்துவமனை ஆகியவற்றை தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

சூரத் நகரின் நிலைமை இவ்விரு நகரங்களை விட மோசமாக பதைபதைக்க வைப்பதாக உள்ளது. இங்குள்ள மயான பூமிக்கு சடலங்கள் வந்தவண்ணம் உள்ளதாக இங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சராசரியாக 80 சடலங்கள் வருவதாக ராம்நாத் கேளா மற்றும் குருக்ஷேத்ரா மயான பூமி ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள், இங்குள்ள அஸ்வினி குமார் மயானத்தில் நாளொன்றுக்கு 100 சடலங்கள் கொண்டு வரப்படுவதாக சொல்லப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலைக்கு முன் ராம்நாத் கேளா மற்றும் குருக்ஷேத்ரா ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு 20 சடலங்களும் அஸ்வினி குமார் மயானத்தில் நாளொன்றுக்கு 30 சடலங்கள் வந்த நிலையில் இந்த திடீர் அதிகரிப்பால், ஊழியர்கள் செய்வதறியாது விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அமரர் ஊர்திகள் கூட கிடைக்காமல், டெம்போ-களிலும் வேறு வாகனங்களிலும் ஏற்றிக்கொண்டு மயான பூமிக்கு எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், மயான பூமியில், திறந்த வெளியில் சடலங்களை ஆங்காங்கே போட்டு எரியூட்டும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இரவு பகலாக சடலங்கள் எரியூட்டப்படுவதால், தகன மேடைகளில் உள்ள இரும்பு பிடிமானங்கள் தீயில் உருகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறும் பணியாளர்கள், சடலங்களை எரிப்பதற்கு தேவையான விறகு கூட கிடைக்காமல், பாடை கொம்புகளை மண்ணென்னெய் மற்றும் டீசல் ஊற்றி பற்றவைக்க வேண்டிய நிலை உள்ளது என்று கூறுகின்றனர்.

இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே மூடிய மூன்று மாயணங்களை நகராட்சி நிர்வாகம் பயன்பாட்டுக்கு திறந்து விட்டிருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்கள் அரசின் இந்த தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பு உள்ள நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது.

இதற்கு பதிலளித்த மாநில அரசு கொரோனா தொற்று குறித்தும் மரணம் குறித்தும் பத்திரிக்கைகள் தவறான செய்தியை வழங்குவதாக குற்றம் சாத்தியிருந்தது.

இத்தனை பத்திரிக்கைகளும் அரசுக்கு எதிராக பேச வேண்டிய அவசியம் என்ன ? என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில் ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்ட செய்திகள் வருகின்றன, செய்தி நிறுவனங்கள் ஆதாரம் இல்லாமல் எதையும் தெரிவிக்க வேண்டிய காரணம் இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

நன்றி – ஸ்க்ரோல்