திருவனந்தபுரம்: கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு 6 வயது சிறுமி பலியானதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் இந்த நோய் பரவ பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா பாதித்து 2 பேர் பலியாகினர். அரசின் தடுப்பு நடவடிக்கை காரணமாக நோய் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் ஷிகெல்லா பாதித்து கடந்த மாதம் 15ம் தேதி 55 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து வயநாடு நூல்புழா பகுதியை சேர்ந்த சுனில்குமார் மகள் மஞ்சரி என்ற 6 வயது சிறுமி, பத்தேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் ஷிகெல்லா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மஞ்சரி இறந்து போக மக்கள் பீதியில் உள்ளனர்.