திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லீம் சபை சார்பில், ரம்ஜான் பண்டிகையின் இரவு தொழுகைக்கு கூடுதல் நேரம் கேட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை வழங்கினர்.
இதுகுறித்து இச்சபையின் செயலாளர் எஸ்.சலீம் தீன் கூறியது, தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் இருப்பதற்காக, தமிழக அரசு மீண்டும் சில தளர்வுகளுடன், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் இந்த நேரத்தில் மிகவும் அவசியமாக இருந்தாலும், இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இக்காலகட்டத்தில் தான் வருகிறது.
இஸ்லாமியர்களின் இறை வணக்கத்திற்குக் கொஞ்சம் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை தாங்களும், ஆலோசனை செய்து வழிபாட்டுத் தலங்களின் அனுமதி நேரத்தை கூடுதலாக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு தரிசனத்திற்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்க உள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் ரமலான் மாத இரவு தொழுகையை முஸ்லீம்கள் பள்ளி வாயில்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாகப் பள்ளி வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டன.
புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவு நேரத் தொழுகையைப் பள்ளி வாயில்களில் நிறைவேற்ற முடியாமல் இஸ்லாமியர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். எனவே, சிறுபான்மை முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளி வாயில்களில் இரவு 8 மணிக்குப் பதிலாக, இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும். கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினோம் என்றார். உடன், தலைவர் எம்.அய்.கமாலூதீன், உதவி தலைவர் எம்.அப்துல் ரஹ்மான், செயலாளர் எஸ்.சலீம் தீன், உதவிச் செயலாளர் ஈ.பி.மீரான் மைதீன், பொருளாளர் எஸ்.முஹம்மது சுல்தான் உள்ளிட்டோர் சென்றனர்.
ரம்ஜான் இரவு தொழுகையை இரவு 10 மணி வரை நீட்டிக்கக் கோரி, பெரியப் பள்ளி வாயில், சின்னப் பள்ளி, மேலப்பள்ளி, ஆலிம் சாஹிப் அப்பா தைக்கால் பள்ளி, ஆலி அனாதை பள்ளி, நியாஸ் பள்ளி, ரசீதியா பள்ளி, மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி, நூர் பள்ளி உள்ளிட்ட அனைத்தும் பள்ளி வாயில்களிலும் தொழுகைக்கு வந்தவர்களிடம், தொழுகை முடிந்து வெளியே வந்த போது, ஆயிரக்கணக்கானவர்களிடம் கையெழுத்து வாங்கினர்.