திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள கனரா வங்கி ஒன்றில், அந்த வங்கியின் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
\
கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம், குத்துப்பரம்பா தோக்கிலங்காடி பகுதியில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளாராக கே. ஸ்வப்னா (வயது 38) பணிபுரிந்து வருகிறார். இவர் அதிகாலையிலேயே வங்கிக்கு வந்த நிலையில், வங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பொதுவாக காலை 9 மணிக்கு வங்கி நேரம் தொடங்கும் போது, வங்கிக்கு வந்த பெண் ஊழியர், ஸ்வப்னா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைக்கண்ட அவர் சத்தம்போடவே, அப்போது அங்கு வந்த சக பணியாளர்கள், உடனடியாக ஸ்வப்னாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து தகவல்அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது அறையில் ஒரு கடிதம் கிடைத்தது. அதில், வேலை பளு காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஸ்வப்னா கடந்த ஆண்டுதான் (2020) குத்துப்பரம்பா பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியமர்த்தப்பட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.