ஒருவழியாக, 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மணிநேரங்கள் மட்டுமே பாக்கி.

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு, இந்தமுறை மிக அதிகநாட்கள் நாமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்; ஆனால், தேர்தலுக்கு முன்பாக, எந்தக் கூட்டணி வெற்றிபெறும் என்பது தொடர்பான ஒரு கருத்துருவாக்க யுத்தத்தில் திமுக வென்றுவிட்டது என்றே பல அரசியல் விமர்சகர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தேர்தல் கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட மூன்று முக்கிய அம்சங்கள் மட்டுமே நமது அதீத கவனத்தைப் பெற்றவையாக உள்ளன.

அதாவது, திமுக தலைவராக பொறுபேற்று தான் சந்தித்த மற்றும் சந்தித்துக் கொண்டிருக்கும் இரண்டு பொதுத்தேர்தல்களிலும், பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை அவர் தனது கூட்டணியில் இணைத்துக்கொள்ளவே இல்லை. பலவிதமான ஆலோசனைகள் மற்றும் வற்புறுத்தல்கள் இருந்ததாக கூறப்பட்டாலும், அவர் பாமகவை எக்காரணம் கொண்டும் கூட்டணிக்குள் அனுமதிக்கவேயில்லை. அதேபோல்தான் தேமுதிகவையும்!

ஏனெனில், இந்த இரு கட்சிகளின் உளவியல் தன்மைகளே மாறுபட்டவ‍ை. அந்த உளவியல் தன்மைகள், கூட்டணியின் பெரிய கட்சிக்கு நிச்சயம் ஏற்புடையதாக இல்லாதவை. எனவே, ஸ்டாலின் அதை சிறப்பாக புரிந்துகொண்டு அக்கட்சிகளை கழற்றிவிட்டுள்ளார்.

இன்னொன்று பார்த்தால், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி. காங்கிரஸ் என்பது எப்போதுமே ஒரு வேண்டாத சுமை! அந்தக் கட்சி, தேவையில்லாமல் அதிக தொகுதிகளை அடம்பிடித்து பெற்றுக்கொண்டு, கூட்டணியின் பெரிய கட்சியினுடைய தோல்விக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அக்கட்சியை கழற்றிவிடுவதே நல்லது என்ற கருத்துகளெல்லாம் அரசியல் வானில் பறந்து திரிந்தன.

ஆனால், காங்கிரஸ் விஷயத்தில் ஸ்டாலின் தெளிவாக இருந்தார். காங்கிரஸ் மூலமாக, சிறுபான்மையின வாக்குகள் எப்படி மொத்தமாக அணி திரளும் என்பது மட்டுமில்லாமல், எப்பகுதிகளிலெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கென்று வாக்குகள் விழும் என்பதையெல்லாம் நன்றாக அறிந்து, அக்கட்சியை தொடர்ந்து தன் கூட்டணிக்கு இறுக்கமாக வைத்துக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

மற்றொரு அம்சம், இத்தேர்தலில் திமுக தனித்து நின்றாலே வெற்றிபெறும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த எந்தக் கூட்டணி கட்சியையும் இழக்காமல், மேலும் புதிதாக சில கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக்கொண்டு, அதேசமயம், திமுகவும் மிக கணிசமான தொகுதிகளில் போட்டியிடும் வகையில் செய்து, தன் கட்சித் தொண்டர்களின் உளவியலை வலுப்படுத்திவிட்டார்!

எனவே, ஸ்டாலின், தான், யாருக்கும் எந்தவகையிலும் சளைக்காத ஒரு அரசியல் நிபுணர் என்பதை நிரூபித்து வருகிறார்.