சென்னை: ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் இந்த முறை வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பூத்சிலிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் வசித்து வந்த அவரது தோழி சசிகலாவுக்கும் ஜெயலலிதாவின் இல்ல முகவரியிலேயே வாக்காளர் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், ஜெ. மறைவுக்கு பிறகு, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதாகவும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டதாலும், அந்த முகவரியில் வசித்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அதனால் சசிகலாவின் பெயரும் போயஸ்கார்டன் பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து சசிகலா தரப்பில் புதிய முகவரியில் வாக்கார் பெயர் இடம்பெறக்கோரி மனு கொடுக்காததால், அவரது பெயர் விடுபட்டுள்ளது. தற்போது, சென்னை தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் வசித்துவரும் சசிகலா அந்த முகவரியில் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாக்காளர் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறாதது அமமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.