சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளனர். இந்த நிலையில், இன்று செய்தியளார்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்தியபிரதா சாகு கூறியதாவது,
தமிழக தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 88,900 வாக்குச்சாவடிகள் தயார் நிலை உள்ளது. இவற்றில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும் என்றவர், தேர்தல் பணியில், சுமார் 4.17 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர் என்றார்.
மேலும், வாக்காளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்றவர், கொரோனா நோயாளிகளும் மாலை 6 மணிக்கு பிறகு பிபிஇ உடையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என்றார்.
வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை இடைவெளியின்றி, சுமார் 12 மணி நேரம் நடைபெறும் என்றவர், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு ஊபர் நிறுவனத்தின் மூலம் இலவச போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 95 சதவீத வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும் என்றார்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறியதாக நேற்று பிற்பகல் 3 மணி வரை சுமார் 428 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதிக தேர்தல் விதிமீறல் புகார்கள் கரூர் தொகுதியில் பதிவாகியுள்ளது‘. வாக்காளர்கள் 1950 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.
5 தொகுதிகளில், தேர்தல் ரத்து தொடர்பாக அதிமுக கொடுத்துள்ள புகார் மீது தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றவர், பணம் பறிமுதல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தினசரி அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறினார்.