மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு இடங்கள் பெறுகின்ற மற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு வழங்கப்பெறும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கோப்பை வெல்லும் அணிக்கு இதற்குமுன் ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத்தொகை ரூ.10 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாமிடம் பெற்ற அணி இதற்குமுன் பெற்றுவந்த தொகையான ரூ.12.5 கோடித் தொகை, இனிமேல் ரூ.6.25 கோடி மட்டுமே பெறும். இதுமட்டுமின்றி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று தோல்வியடைந்து வெளியேறும் 2 அணிகளுக்கு இதற்குமுன் வழங்கப்பட்ட ரூ.8.75 கோடிக்கு பதிலாக இனிமேல் ரூ.4.4 கோடி மட்டுமே வழங்கப்படும்.
மேலும், போட்டியை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு இனிமேல் ரூ.1 கோடி வழங்கப்படும். இதன்படி, மாநில சங்கங்களுக்கு அணி நிர்வாகங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.50 லட்சத்தை வழங்க வேண்டும் மற்றும் அதேயளவு தொகை பிசிசிஐ அமைப்பாலும் வழங்கப்படும்.
ஐபிஎல் 13வது சீசன் போட்டிகள் வருகின்ற 29ம் தேதி துவங்கவுள்ளன என்பது நமக்கு நினைவிருக்கலாம். இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.