சென்னை:
உயர்நீதி மன்ற கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டுமே 57 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அனுமதியில்லாத ஆலைகளை மூடவேண்டும் என்று கடுமையான உத்தரவை பிறப்பித்ததுடன், நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தியது குறித்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீரை பயன்படுத்த அரசிடம் தடையில்லாச் சான்று பெறாத, புதுப்பிக்காத மற்றும் அனுமதி பெறாமல் இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடும் நடவடிக்கையை தமிழகஅரசு விரைவுபடுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 1700 க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகள் இயங்கி வருவதாகவும், அனுமதி பெறாமலேயே பல ஆலைகள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதுபோன்ற சட்ட விரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்து, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
வேலூர் காட்பாடி அருகே திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் குடிநீர் ஆலையில் அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுக்கு சீல் வைக்கப்பட்டது. உள்ளிபுத்தூர் கிராமத்தில் அருவி என்ற பெயரில் இயங்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த்துக்கு சொந்தமானது.
இதனால், தமிழகத்தில் கேன் தண்ணீர் உற்பத்தி முடங்கி, கேன் குடிநீர் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 125 குடிநீர் ஆலைகள் இயங்கி வந்த நிலையில் 55 ஆலைகள் மட்டுமே அரசின் அனுமதி பெற்றது என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 13 சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், கடந்த 2 நாட்களாக அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக் காரணமாக, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் 57 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.