சென்னை: அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் நாங்கள் வேளச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சந்தோஷ்பாபுவை  ஆதரித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 5 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக மட்டுமின்றி, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன்,  நாட்டில்  “அரசியல் என்னும்  சாக்கடை இன்னும் அசிங்கமாகிக் கொண்டிருக்கிறதே தவிர அதனை யாரும் சரிசெய்யவே வரவில்லை. இதற்கு மேல் விட்டால் அடுத்த தலைமுறை நாசமாகிவிடும் என்பதால் தைரியமாக ஒரு கூட்டம் இறங்கி வந்திருக்கின்றனர்.

இங்கு  போட்டியிடும் மநீம வேட்பாளர் சந்தோஷ்பாபு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். எதற்கு இந்த மக்களுக்காகப் பணி செய்ய வேண்டும் என நினைக்காமல் இறங்கி வந்திருக்கிறார். அரசியல் சாக்கடைதான் என்பதை ஒப்புக்கொண்டு, அந்த சாக்கடைக்குள் இறங்கி, உங்களுக்காக துப்புரவுப் பணி செய்யும் தொழிலாளி சந்தோஷ்பாபு, அவர் மட்டுமல்ல இந்த  கமல்ஹாசன் உள்பட அனைவரும்,  அரசியல் சாக்கடையின் துப்புரவுத் தொழிலாளர்கள். எ ங்களுக்கு இதில் அசிங்கம் கிடையாது. இதனை நாங்கள் சுத்தம் செய்யாவிட்டால் நாளைய தலைமுறையினர் உங்களைத் திட்டுவார்கள். என்னைத் திட்டுவார்கள். அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

திமுக, அதிமுக இரு அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஏழைகளின் வயிற்றில் அடித்து சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கின்றனர். அதனை மாதிரி ஒரு அக்கிரமம், கிரிமினல் குற்றம் வேறு இருக்க முடியாது. சட்டப்பேரவையில் 33% உறுப்பினர்கள் கிரிமினல் குற்றம் செய்தவர்கள் என ஊடகங்களே சொல்கின்றன.   ஒரு வித்தியாசத்திற்கு இம்மாதிரி படித்தவர்களை எம்எல்ஏக்களாக அமர்த்துங்கள், பெருமையாக இருக்கும்.

இவ்வாறு  அவர் கூறினார்.