சென்னை: கடைகள், தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற தவறினால் கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது உருவாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தேர்தல் காரணமாக, மக்கள் அதிக அளவில் கூடுவதால், கொரோனா தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இதுவரை 2,42,647 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், 2,35000 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 4206 பேர் உயிரிழந்துள்ளதுடன், தற்போது, 3441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதையடுத்து,  கடைகள், தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியவேண்டும், சானிடைசர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிகவளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அவ்வப்பொழுது கைகழுவும் திரவம் (அ) சோப்பு கரைசல் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கடையின் உரிமையாளர்கள் கண்காணித்து உறுதிசெய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சீரான நிலையில் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். மேலும், கடைகளின் வாயிலில் டெட்டால் (அ) சானிடைசர்கள் போன்ற கைக்கழுவும் திரவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் பொழுது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டெட்டால் (அ) சானிடைசர்கள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் கடைக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பது தெரியவந்தால், தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு விவரம்: