சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்மையை போட்டுத்துடைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
வன்னியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சியினரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு மற்ற ஜாதியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை முன்னிறுத்தி, அதிமுக, பாமகவினர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஆனால், மற்ற இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தனது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, அந்த பகுதி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது தற்காலிகமானது, ந்த இடஒதுக்கீடானது 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்தார் என உண்மையை போட்டுடைத்தார்.
அமைச்சரின் பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பாமகவினர், இடஒதுக்கீட்டை முன்னிலைப்படுத்தி வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், அமைச்சரின் உளறல், வன்னிய இன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு தற்காலிகமானது என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், வன்னியர்களின் தற்காலிக இடஒதுக்கீட்டை பிரமாண்டமான வெற்றியாக காண்பித்து, பாமகவினர் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது வன்னியர் இன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக அரசு தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதும், அது தொடர்பாக அரசை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.