5 மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே மோதல் வலுத்துள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் மார்ச் 27ந்தேதி முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவும் மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, மம்தா பானர்ஜி அரசில் இடம்பெற்ற அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை பலரை பாரதியஜனதா கட்சி தனது முகாமுக்கு இழுத்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மம்தாவும், ஆட்சியை கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தலைமையும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மார்ச் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 2ந்தேதி தொடங்கிய நிலையில், வரும் 19ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அங்கு வேட்புமனுத்தாக்கல் தீவிரமடைந்து உள்ளது.
இதையடுத்து, 2வது கட்டமாக 30 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ந்தேதியும், 3வது கட்டமாக 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ந்தேதியும், 4வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு ஏப்ரல் 10ந்தேதியும், 5வது கட்டமாக 45 தொகுதிகளுக்கு ஏப்ரல் 17ந்தேதியும், 6வது கட்டமாக 43 தொகுதிகளுக்கு ஏப்ரல் 22ந்தேதியும், 7வது கட்டமாக 36 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ந்தேதியும், 8வது கட்டமாக 34 தொகுதிகளுக்கு கடைசி வாக்குப்பதிவு ஏப்ரல் 29ந்தேதியும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தலையொட்டி, அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கிறது. பாஜக தலைவர்கள் மேற்குவங்கத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜியுடம் களப்பணியாற்றி வருகிறது. கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுவெந்து அதிகாரி திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர், அவருக்கு எதிராக நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதுவரை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த மம்தா, இந்த முறை நந்திகிராம் தொகுதிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு திரும்பிய மம்தா, விபத்துக்குள்ளானது அனைவரும் அறிந்ததே.
மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அங்கு பாஜக தலைவர்கள் முகாமிட்டு, மாற்று கட்சியினை விலைபேசும் குதிரைபேர அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் வங்கதேச சுற்றுப்பயணமும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 27ந்தேதி நடைபெற இருக்கும் சூழலில், 26ந்தேதி பிரதமரின் வங்கதேச பயணம் அரசியல் நோக்கர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
வங்காளதேசத்தின் சுதந்திர தின பொன்விழாவும், வங்காளதேசத்தை நிறுவிய ‘வங்கபந்து’ ஷேக் முஜிப்பூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவும் அங்கு 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம், 17ந்தேதி (புதன்கிழமை) தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலி, நேபாள அதிபர் வித்யாதேவி பண்டாரி, பூடான் பிரதமர் லோடே ஷெரிங் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி பிரதமர் மோடி, வருகிற 26-ந்தேதி வங்காளதேசம் செல்கிறார். அங்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். இந்த பேச்சுவார்த்தையின்போது பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒரு ஒப்பந்தமும், இரு நாடுகளின் நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான 2 ஒப்பந்தம் என மொத்தம் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு வெளியே 3 இடங்களுக்கு செல்லும் பிரதமர், துங்கிபாராவில் ஷேக் முஜிப்பூர் ரகுமான் பிறந்த கிராமத்தில் உள்ள வங்கபந்து வழிபாட்டு தலத்துக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கோபால்கஞ்ச், சத்கிரா ஆகிய இடங்களில் உள்ள 2 இந்து கோவில்களுக்கும் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோவில்கள், மேற்குவங்கத்தில் வசித்து வரும் மடுவா சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களாகும். இந்த சமூகத்தினர் மேற்கு வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாக்குகள், தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
வாக்குப்பதிவு நாளான மார்ச் 27 அன்று மடுவா பிரிவின் நிறுவனர் ஹரிச்சந்த் தாக்கூரின் பிறப்பிடம் அமைந்துள்ள பங்களாதேஷின் ஓரகாண்டிக்கு மோடி சென்று மரியாதை செய்கிறார். மடுவா சமூகத்தில் மேற்கு வங்காள மொத்த மக்கள் தொகையில் சுமார் 3 கோடி பேர் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட 28 தொகுதிகளில் செல்வாக்காக உள்ள மடுவா மாக்கள், அந்த பகுதிகளில் அரசியல் கட்சிகளின் வெற்றித்தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், மடுவா மக்களின் வாக்குகளை, பாரதிய ஜனதா கட்சிக்கு பெறும் நோக்கிலேயே, மேற்குவங்க மாநில முதல்கட்ட தேர்தல் நாளான 27ந்தேதி அன்று பிரதமர் மோடி, வங்கதேசத்தில் உள்ள மடுவா மக்களின் வழிப்பாட்டு ஸ்தலங்களுக்கு வழிபாடு செய்ய முடிவு செய்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
மடுவா சமூகத்தினரின் வாக்குகளை பெறும் வகையில், மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.