டெல்லி: நாடு முழுவதும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் உள்பட ஏராளமான பரிசுப்பொருட்களும் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் மட்டும் ரூ. 127.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும்  295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் மேற்கொண்ட தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கையில் கடந்த 16ம் தேதி வரை, ரூ.331 கோடி மதிப்பில் ரொக்க பணம், மது, இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் (Tamil Nadu) மட்டும் ரூ.50.86 கோடி ரொக்கப் பணம், ரூ.1.32 கோடி மதிப்பிலான மது, ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள், ரூ.14.06 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.61.04 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.127.64 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.