திருப்பூர்:  வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக  வந்த ரகசிய தகவலின்பேரில் திருப்பூர் பகுதியில் மதிமுக, திமுக நிர்வாகிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை கவர பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதிலும் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதை தடுக்க ஏராளமான பறக்கும் படைகளை தேர்தல் ஆணையம் நியமித்து கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில்,  திருப்பூர் மாவட்ட மதிமுக துணைச் செயலராக கவின் நாகராஜ்க்கு  சொந்தமான வீடு, தாராபுரம், அலங்கியம் சாலையில் அமைந்துள்ளது. அங்கு  வருமான வரித்துறையினர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்டோர் சென்று  நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல் சென்னியப்பா நகரில் உள்ள திமுக நகரச் செயலர் தனசேகரின் வீட்டிலும், வருமான வரித்துறையினர் சென்று தொடர் சோதனையிட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகள் இரண்டு பேரின் வீடுகள் முன்பும் குவிந்தனர். ஒரே நேரத்தில் மதிமுக, திமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.