சென்னை: கொரோனா அதிகரிப்பால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, பீகாரில் கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையம், பீகார் மாநில அதிகாரிகள் 2 பேர் தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்பு பணிகளுக்காக தேர்தல் அலுவலகர்களாக நியமித்து உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து சத்ய பிரத சாஹு விளக்கம் அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு தெரிவித்த சாகு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றார்.
மேலும், கொரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில்தான், பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பேரவைத் தேர்தல் நடந்த போது, பீகாரில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அங்குள்ள இருந்த அளவு பாதிப்பு, தமிழகத்தில் இல்லை என்று கூறியவர், தேர்தல் ஒத்தி வைப்பது தொடர்பாக ஏதும் ஆலோசிக்கவில்லை என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு, இந்த சம்பவம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார்.