சென்னை: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு  இருப்பதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

அதே வேளையில், வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.  16 சட்டமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 பேர்.  இதில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக துறைமுகம் சட்ட சட்டமன்ற தொகுதி விளங்குகிறது. இதேபோல் 3 லட்சத்து 6 ஆயிரத்து 347 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர் எண்ணிக்கை கொண்ட தொகுதியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதி உள்ளது.

தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 1000 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம்  88, 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் வாக்கு பதிவு  இயந்திரங்கள் (EVM) வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களை சென்னை  மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், சென்னையில்  உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அதனை உடனடியிக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று  என்று தெரிவித்ததுடன், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை  1, 300 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில்,  சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, அவற்றில்  10 வாக்குச்சாவடிகள் மிகப்பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருப்பதாகவும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.