காஞ்சிபுரம்
கமலஹாசன் காரை தாக்கிய வாலிபரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடித்து உதைத்துக் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என அனைத்து அணிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே மற்றும் சமக கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோபிநாத் காஞ்சிபுரம் தொகுதியில் களத்தில் உள்ளார். இவருக்குக் காஞ்சிபுரத்தில் மநீம கட்சியின் தலைவர் காஞ்சிபுரத்தில் நேற்று பரப்புரை செய்தார். அங்குள்ள காந்தி ரோடு பகுதியில் கமல் பரப்புரை செய்த போது பலரும் கூடி இருந்தனர். அப்போது அங்கு நீண்ட தலைமுடி மற்றும் லேசான தாடியுடன் கூடிய ஒரு வாலிபர் காரை நோக்கி வந்துள்ளார்.
கமலஹாசனின் பாதுகாவலர்கள் அவரை தடுத்த போதும் அதை மீறி அவர் காரின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியைத் தாக்கி உடைத்துள்ளார். காவல்துறையினர் அவரை அப்புறப்படுத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அந்த வாலிபரைப் பிடித்து அடித்து உதைத்ததில் அவருடைய வாயில் ரத்தம் வடிந்துள்ளது.
அங்கிருந்த காவல்துறையினர் வாலிபரை மீட்டுள்ளனர். அதையொட்டி கட்சியினர் அந்த வாலிபரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த வாலிபர் குடி போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாலிபரை காவல்துறையினர் காவல்நிலையத்துக்குக் கூட்டிச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கமலஹாசனுக்கு அடி ஏதும் படவில்லை.