டில்லி

கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் போட்டுக் கொள்வோர் இனி ஒப்புதல் கடிதம் அளிக்கத் தேவை இருக்காது என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.   முதல் கட்டமாகச் சுகாதார ஊழியர்கள், கொரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.  தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட குறிப்பிட்ட இணை நோய்கள் உள்ளோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனக் கண்டுபிடிப்பாகும்.  இந்த தடுப்பூசி மூன்று கட்ட சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து உற்பத்தி செய்து வரும் கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் இருந்து வந்தது.  எனவே அந்த ஊசியைப் போட்டுக் கொள்வோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.   இந்த மருந்து சோதனை வடிவில் இருப்பதை அறிந்து அந்த மருந்தைப் போட்டுக் கொள்வதாக கடிதத்தில் இருந்தது.

பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் மருந்து மூன்றாம் கட்ட சோதனையை வெற்றி கரமாக முடித்துள்ளதாகவும் சோதனையில் இந்த மருந்து கொரோனாவை தடுப்பதில் 81% திறன் உள்ளது எனவும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி அறிவித்தது.   மேலும் இந்த சோதனையில் கலந்து கொண்ட 25000 பேரில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது மிகவும் நல்ல தகவல் என டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.   இந்த சோதனையில் 130 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள நிலையில்  வெறும் 43 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதால் கோவாக்சின் பாதுகாப்பானதாக இருக்கும் என அவர்கள் கூறி உள்ளனர்.  மேலும் இனி கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் ஒப்புதல் கடிதம் அளிக்கத் தேவை இருக்காது எனத் தெரிவித்துள்ளனர்.