சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பிரபலமான அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அடையாறு ஆனந்த பவனின் 2 கிளைகள் மூடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா தொற்று, தேர்தல் அறிவிப்பு காரணமாக நடைபெற்று வரும் அரசியல் பொதுக்கூட்டங்களாலும், பொதுமக்கள் முகக்கவசம் உள்பட கொரோனா நெறிமுறைகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டுவதாலும் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த, கோவிட் கேர் மையங்களை மீண்டும் திறக்க தமிழக சகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் செயல்பட்டு வந்த அடையாறு ஆனந்தபவன் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள இரண்டு கிளைகளில் பணியாற்றிய 4 ஊழியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த கிளைகளில் பணியாற்றிய அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு கிளைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.